முக்கிமலை ஊர் கோவை வாழ் மக்கள் நல மன்றம்
(Welfare Association of Mukkimalai Villagers living in Coimbatore)
PAN NUMBER
AAWAM2108E
பதிவு எண்: SRG/Coimbatore North/139/2024 ; Dated 12.07.24
NGO DARPAN UNIQUE ID
TN/2024/0436468
விதிமுறைகளும் வழிகாட்டுதல்களும்
நிர்வாக அமைப்பு
-
நமது சங்கம் அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்றது.
-
சங்கத்தின் நிர்வாகிகள் சங்கத்தின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
-
நமது சங்க நடவடிக்கைகளை நிர்வகிக்க தலைவர், உப தலைவர், செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர், இணை பொருளாளர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செயல்படுவார்கள்.
-
இந்த நிர்வாகக்குழு மூன்று வருடத்திற்கு ஒருமுறை சங்க அங்கத்தினர்களால் தேர்ந்தெடுக்கப்படும்.
-
சங்கம் ஆரம்பிக்கலாம் என்று 2-6-2024 அன்று நடந்த கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டு இந்த நிர்வாக குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. எனவே இந்த குழு 1-6-2027 வரை இந்த பொறுப்பில் இருக்கும். 2027 மே மாத கடைசியில் பொதுக்குழு கூடி அடுத்த இரண்டு வருடத்திற்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும்.
-
வரும் காலங்களில் அடுத்த தலைமுறை இந்த சங்கத்தை வழி நடத்த வேண்டும் என்பதற்காக நிர்வாக குழுவில் இரண்டில் மூன்று பங்கினர் 60 வயதிற்கு உட்பட்டவர்கள்.
-
இந்த குழுவிற்கு ஆலோசனை சொல்வதற்கு ஐந்து பேர் கொண்ட புரவலர் குழுவும் செயல்படும்.
அங்கத்தினர்கள்
-
முக்கிமலை ஊரில் பிறந்து கோவையில் வாழ்பவர்கள் இந்த சங்கத்தில் அங்கத்தினர்களாக இருக்கின்றார்கள்.
-
இந்த சங்கத்தின் உயர்ந்த கொள்கையை கருத்தில் கொண்டு கோவை அல்லாத வெளியூர்களில் வாழும் நமது முக்கிமலை சொந்தங்கள் தங்களையும் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் பேரில் வெளியூரில் வாழும் முக்கிமலை அன்பர்களையும் அங்கத்தினர்களாக சேர்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம்.
-
இதையும் தாண்டி நமது ஊரில் வசிக்கும் சொந்தங்களும் இந்த அரிய பணியில் இணையலாம் என்ற ஒரு விசால எண்ணத்துடன் அங்கத்தினர் சேர்க்கை மேற்கொள்ளப்படும்.
-
வரும் காலங்களில் இந்த சங்கத்தில் பெருவாரியான சொந்தங்கள் தங்களை இணைத்துக் கொண்டு முக்கிமலையின் முன்னேற்றத்திற்காக பங்காற்ற வேண்டும் என்பதே எங்களது தலையாய விண்ணப்பம்.
-
நமது ஊர் நன்றாக இருக்க வேண்டும்; இன்னும் பல முன்னேற்றங்களை அடைய வேண்டும்; ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் இயங்கும் இந்த சங்கம் உங்களை வரவேற்க இரண்டு கரம் கொண்டு காத்திருக்கின்றது.
நிர்வாக விதிமுறைகள்
-
நமது சங்கம் அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்றதால் அதற்கான நிர்வாக இணக்க விதிமுறைகள் பலமுறை ஆலோசனை செய்த பின்பு இயற்றப்பட்டிருக்கின்றன.
-
சங்கத்தின் கூட்டம் மாதம் ஒருமுறை நடத்தப்பட வேண்டும்.
-
ஒவ்வொரு கூட்டத்திலும் வருகை பதிவேட்டில் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அங்கத்தினர்களின் கையொப்பம் பெற வேண்டும்
-
சங்க கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானம் தீர்மான புத்தகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.
-
ஒவ்வொரு வருடமும் நிதிநிலை ஆண்டு (ஏப்ரல் 1) ஆரம்பிப்பதற்கு முன் வரும் நிதியாண்டிற்கு (ஏப்ரல் முதல் தொடரும் ஆண்டு மார்ச்சு வரை) உத்தேச பட்ஜெட் தயார் செய்து அதற்கு பொதுக்குழுவின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்
-
மாதாந்திர கூட்டங்களில் சங்கத்தில் அந்த காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகள் மற்றும் நிதிநிலை இவற்றைப் பற்றி ஆலோசனை செய்து தீர்மானங்களில் குறிப்பிட்டிருக்க வேண்டும். நிதி நிலையானது உத்தேச பட்ஜெட்டுக்கு எதிராக எவ்வளவு செலவினங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை குறிப்பிட வேண்டும்.
-
வருடம் ஒருமுறை வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்து அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
-
ஒவ்வொரு வருடமும் வருடாந்திர அறிக்கை தயார் செய்து அரசாங்கத்திற்கு அனுப்ப வேண்டும்.
-
வருமான வரி விலக்கு போன்ற சலுகைகள் பெறப்படும் பொழுது அதன் தரவுகளை அரசாங்கத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
-
சங்கத்தின் எந்த ஒரு தீர்மானமும் சங்கத்தில் பெரும்பான்மையினரால் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானமாக இருந்து அதன் மேல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
நிதிநிலை வரைமுறைகள்
-
நமது சங்கத்தின் நிதி நிலை மேலாண்மை எப்படி இருக்க வேண்டும் என்று தீவிரமாக ஆலோசித்து கீழ்க்கண்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன.
-
சங்கத்தின் பேரில் தொடங்கப்படும் வங்கி கணக்கு நடப்பு கணக்காக (Current Account) இருக்க வேண்டும்.
-
சங்கத்தின் பேரில் (PAN) நம்பர் வாங்கி அதனை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.
-
கூடுமானவரை எல்லா பரிவர்த்தனைகளும் வங்கி மூலமாகவே இருக்க வேண்டும்.
-
நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கும் பொழுது கையிருப்பு பணம், வங்கி பரிவர்த்தனை கணக்கு இது இரண்டும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.
-
சங்கத்திற்கு நிதி செலுத்துவோர் கண்டிப்பாக வங்கி பரிவர்த்தனை மூலமாகத்தான் செலுத்த வேண்டுமே தவிர பணமாக கொடுக்கக் கூடாது.
-
வங்கி காசோலை புத்தகம் பொருளாளர் கையில் இருக்க வேண்டும்.
-
காசோலையில் குறைந்தது இரண்டு கையெழுத்து இருக்க வேண்டும். அதில் ஒன்று பொருளாளர் கையெழுத்தாக இருக்க வேண்டும். இன்னொரு கையெழுத்து தலைவர் அல்லது செயலாளர் இவர்களில் ஒருவராக இருக்க வேண்டும்.
-
நிர்வாகக் குழு அங்கீகரித்த செலவினங்களுக்கு மட்டுமே காசோலைகள் மூலம் பரிவர்த்தனை செய்ய வேண்டும்
-
நிதி அளிப்பவர்கள் கண்டிப்பாக அவர்களது PAN நம்பரை சங்கத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
-
நடப்பு செலவுக்கு பொருளாளர் ஐந்தாயிரம் ரூபாய் வரை கையில் வைத்திருக்கலாம். இந்த கையிருப்பு தொகைக்கு தகுந்த தரவுகளை சமர்ப்பித்து விட்டு மேலும் கையிருப்பு தொகை பெற்றுக் கொள்ளலாம்.
-
சந்தாதாரர்கள் வங்கி மூலமாக சந்தா செலுத்துவதை ஊக்கப்படுத்த வேண்டும்.
-
நிர்வாக குழு அங்கீகரித்த உறுப்பினர்கள் மட்டுமே அங்கத்தினர்களிடம் சந்தா பெற வேண்டும். அந்த உறுப்பினர்களின் விவரம் சங்க கூட்டத் தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
-
சந்தாவை பணமாக அங்கத்தினர்கள் கொடுக்கும் பட்சத்தில் அதை 15 நாட்களுக்குள் வங்கியில் செலுத்தி விட வேண்டும்.
-
மரணம், மருத்துவம், கல்வி போன்ற நிகழ்வுகளுக்கு உதவித்தொகை கொடுப்பதற்கு நிதிக்குழுவின் பரிந்துரை அவசியம் இருக்க வேண்டும்.
வழிகாட்டு குழுக்கள்
-
சரி பார்ப்பு சமநிலை (Check and Balance) அமைப்பு சங்கத்தில் நடைமுறைப்படுத்துகின்றோம்.
-
நிர்வாக குழுவுக்கு அறிவுரை வழங்க அனுபவம் மிக்க புரவலர்கள் இருக்கின்றார்கள். இதையும் தாண்டி சங்க நிகழ்வுகளை வழிநடத்த ஆறு குழுக்கள் செயல்படுகின்றன.
-
ஒவ்வொரு குழுவிலும் புரவலர்களும் நிர்வாக குழு உறுப்பினர்களும் அங்கத்தினர்களாக இருந்து சங்க நிர்வாகத்தை வழிநடத்துகின்றனர்.
-
சங்க மேலாண்மை குழு: இந்தக் குழு சங்கம் அரசாங்க விதிமுறைகள் படி, மற்றும் சங்கம் எடுத்த தீர்மானங்கள் படி நடக்கின்றதா என்பதை அவ்வப்பொழுது ஆய்வு செய்யும்.
-
உறுப்பினர் தொடர்பு குழு: இந்தக் குழு சங்க உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு சங்கத்தை மேன்மேலும் எப்படி முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும் என்பதை தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு பாலமாக செயல்படும்.
-
சமுதாய தொடர்பு குழு: பொதுமக்கள் தொடர்பு என்பது சங்க வளர்ச்சிக்கு அவசியம். சமுதாய தொடர்பு குழுவானது நமது சமுதாய பெரியவர்களிடமும் பொது ஜனங்களிடமும் சங்கத்தின் கொள்கைகளை பற்றி கூறி சங்கத்தின் முன்னேற்றத்திற்கு ஆலோசனைகள் பெறும்.
-
கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குழு: இந்தக் குழு கல்வி மற்றும் தொழில் சம்பந்தமான வாய்ப்புகள் ஏற்படும் பொழுது அவற்றை நல்ல முறையில் உபயோகிக்க குழந்தைகளுக்கும் குடும்பங்களுக்கும் அவ்வப்பொழுது அறிவுரை வழங்கும். கல்வி உதவித் தொகை பற்றியும் இந்த குழு முடிவு செய்யும்.
-
நிவாரண நிதி பரிந்துரை குழு: அங்கத்தினர்களின் குடும்பங்களில் ஏற்படும் அசம்பாவித நிகழ்வுகளான மரணம், மருத்துவம் இவற்றிற்கான நிவாரணத் தொகையை அளிப்பதற்கு இந்த குழு நிர்வாக குழுவுக்கு பரிந்துரை செய்யும்.
-
தொழில்நுட்பக் குழு: தொழில்நுட்பம் அதிசயிக்க அளவிற்கு வளர்ந்து இருக்கும் இந்த காலத்தில் இதன் பயன்பாட்டை சங்கத்தின் வளர்ச்சிக்காகவும் கருத்து பரிமாற்றத்திற்காகவும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இந்த குழு அவ்வப்பொழுது பரிந்துரைக்கும்.
-
நிதிநிலை தணிக்கை குழு: சங்கத்தின் நிதி நிலையில் நேர்மைத் தன்மையும், வெளிப்படைத்தன்மையும், உண்மை தன்மையும் அவசியம். இவற்றை சங்கத்தின் நிதிநிலை தணிக்கை குழு அவ்வப்பொழுது ஆய்வு செய்து ஆலோசனைகளும் வழங்கும்.
சங்கத்தின் தொலைநோக்குப் பார்வை
-
சங்கம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று சங்கத்தின் கருத்து பரிமாற்றங்களில் எதிரொலித்தது ஒரு உத்வேகத்தை கொடுக்கின்றது.
-
வரும் மூன்று ஆண்டுகளில் சங்கத்திற்கு பலமான அஸ்திவாரம் போடும் பட்சத்தில் சங்கத்தின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதை தெளிவாக யூகிக்க முடிகிறது.
-
வரும் 3 ஆண்டுகளில் அரசாங்கத்திற்கு ஆண்டறிக்கை, நிதிநிலை தணிக்கை அறிக்கை, சங்க செயல்பாடுகள் இவற்றை தெளிவாக எடுத்து கூறி நமது சங்கம் அடுத்த நிலையில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாக மாற வேண்டும் என்பதே சங்கத்தின் கனவு. அதற்கு எல்லா உறுப்பினர்களின் ஆலோசனைகளும் உழைப்பும் தேவை என்பதே நிதர்சனம்.
-
வரும் காலங்களில் நமது சங்கம் தன்னார்வ தொண்டு நிறுவனமாக மாறும்பொழுது தொழில் நிறுவனங்களுடனும் அரசாங்கத்துடனும் இணைந்து பல்வேறு நலத்திட்டங்களை சமுதாயத்திற்கு நடைமுறைப்படுத்தும் சந்தர்ப்பம் கண்டிப்பாக ஏற்படும்.
-
அது மட்டுமல்ல, இந்த சங்கத்தை முறையாக செயல்படுத்தும் பொழுது ஒரு நிறுவனம் எப்படி உருவாக்க வேண்டும் என்ற ஒரு சுய பயிற்சியும் அங்கத்தினர்களுக்கு கிடைக்கும்.
-
எனவே இன்றைக்கு ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றது ஒரு சிறிய நல சங்கம் என்றாலும் இதன் தொலைநோக்கானது அனைத்து விதிமுறைகளையும் உள்ளடக்கிய தன்னார்வ தொண்டு நிறுவனமாக பரிணாமம் பெற வேண்டும் என்பதே.
-
அப்படிப்பட்ட வளர்ச்சி ஏற்படும் பொழுது நமது சந்ததிகளும் தங்களை தொடர்பு படுத்தி சமுதாய பணிக்காக குறிப்பாக நமது முக்கிமலை பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற வழிவகை செய்யலாம் என்பதே எங்களது தலையாய நோக்கம்.